தங்கள் படையில் 78 பேரைக் காணவில்லையென்று சிறிலங்கா
அரசாங்கம் அறிவித்துள்ளது.யாராவது கண்டீர்களா?
நேற்றுப் புதன்கிழமை (11.10.2006) அன்று யாழ்ப்பாணத்தில் முன்னரங்கப்பகுதியிலிருந்து ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்கோடு பலமுனைகளில் முன்னேறிய சிறிலங்கா அரசபடையிரை எதிர்த்துப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலைச் செய்தனர்.
சில பகுதிகளில் அவர்களை முன்னேறவிட்டு பின் தாக்கியழித்தனர். இம்முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதோது பெருமளவு இராணுவத்தினர் காயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட டாங்கிகள் உட்பட கவசப்படை நிர்மூலமாக்கப்பட்டது.
பலத்த இழப்புக்களுடன் இராணுவத்தினர் தமது நிலைகளுக்குத் தப்பியோடினர்.
புலிகள் தரப்பிலிருந்து இராணுவத்தினரின் இழப்புக்குறித்து எண்ணிக்கைத் தகவல்கள் எவையும் வெளிவரவில்லையாயினும் புலிகள் சார்பான ஊடகங்கள் 200 வரையான படையினர் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியிட்டன.
புலிகள், தாங்கள் பெருமளவான இராணுவத்தினரது சடலங்களைக் கைப்பற்றியதாகவும் அவற்றை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகக் கையளிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அரசதரப்போ தமது தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுச்சொச்சம் பேர் காயமடைந்தனர் என்று இன்று காலைவரை சொல்லிக்கொண்டிருந்தது. பின் இறப்புத் தொகை 43 ஆக உயர்ந்திருந்தது.
ஆனால் இப்போது கதை மாறத் தொடங்கியுள்ளது.
இறுதியா அரசு வெளியிட்ட தகவலின்படி 55 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்றும் 283 படையினர் காயமடைந்தனர் என்றும் சொல்லியதோடு புதிதான தகவலையும் வெளியிட்டுள்ளது.
அதாவது தங்களில் 78 படையினர் இத்தாக்குதலில் காணாமற் போயுள்ளதாக புதிதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
புலிகள் இன்றுமாலை 74 இராணுவத்தினரது சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்த்திடம் கையளித்த நிலையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
முன்பென்றால் சடலங்களைக் கையேற்காமல் விட்டிருக்கும். ஆனால் இப்போது உண்மைநிலைகள் உடனுக்குடன் வெளித்தெரிந்து விடுகிறது. இன்று கிட்டத்தட்ட எல்லா சர்வதேச செய்தித்தாபனங்களும் படைத்தரப்பின் மோசமான இழப்புக்களை வெளிக்கொணர்ந்துள்ளன. சிங்களதேசத்துக்குத் துதிபாடும் சில தளங்கள் மட்டும் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளன.
சமர் நடந்த இடத்தில் காணாமற் போதல் என்பது பெரும்பாலும் சாத்தியமற்றது. அது காட்டுப்பகுதியன்று. அத்தோடு பெரிய பிரதேசமுமுன்று. வெறும் 7 கிலோமீற்றர்களை மட்டும் முன்னரங்காகக் கொண்ட வெட்டைப் பகுதி. இதற்குள் ஒரு கொம்பனி இராணுவத்தினர் காணாமற் போயுள்ளதாகச் சொல்வது எப்படி?
ஆக படைத்தரப்பு ஒத்துக்கொண்டபடி பார்த்தாற்கூட ஆகக்குறைந்தபட்சம் நூற்றுமுப்பது படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஓரளவு விவரம் புரிந்தவர்கள் கூட்டிக்கழித்துப் பார்த்து நிலைமையை விளங்கலாம். காயமடைந்த இராணுவத்தினர் தொகையும் இராணுவத்தரப்பு சொல்லியுள்ளதை விட அதிகமாகவே இருக்கும். கொழும்பில் வாழும் சிலரின் தகவலின்படி நேற்று மாலையிலிருந்து இரவுவரை விரைந்த நோயாளர் காவு வண்டிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டால் நிலைமை இன்னும் மோசம்தான்.
ஒருபுறம் சமாதானத்துக்குத் தேதி குறித்துக்கொண்டு இன்னொருபுறம், அந்தத் தேதிக்குள் ஆனையிறவைப் பிடிப்பதென்று இன்னொரு தேதிகுறித்து, திட்டம் போட்டுக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் நாடகமாடுகிறது.
வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள். சில தினங்களின் முன் வாகரை ஆக்கிரமிப்பு முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டது. இன்று அம்பாறையில் பெருமெடுப்பில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையைச் செய்கிறது அரசபடை.
கடந்த சில வாரங்களாக யுத்தச் சமநிலையில் புலிகள் பெருமளவு வீழ்ச்சிகண்டிருந்ததாகத் தோன்றிய விம்பம் சற்றுக் கலையத் தொடங்கியுள்ளது. புலிகள் பின்னடைவைச் சந்தி்ததது உண்மைதான். புலிகள் நிபந்தனையற்ற பேச்சுக்கு ஒத்துக்கொண்டதுகூட சற்று தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான் என்றே கொள்ளலாம்.
ஆனால் சிங்களதேசம் சொல்வதுபோல் படுமட்டமான நிலைக்குப் புலிகள் போய்விடவில்லை. தாங்களே உருவாக்கிய ஒரு பொய்மையை அவர்களே நம்பி, இன்று மாட்டுப்பட்டுப் போனார்கள்.
இத்துடன் சிங்களதேசம் நிறுத்தப்போவதில்லை. இன்னும் தொடர்ச்சியான நகர்வுகளைச் செய்யத்தான் போகிறது. ஏனெனில் தனியே இது இராணுவ வெற்றிகளோடு மட்டும் அல்லது இராணுவத்தினரோடு மட்டும் தொடர்புடையவையல்ல.